Tuesday, March 10, 2026

ஆருடம்

Posted by sasi at 2:30 AM 0 comments

 

இன்று பகலிலோ

இன்று இரவிலோ

நாளையோ

நாளை மறுநாளோ

அதற்கு பிறகோ....

 

ஜனிக்கலாம்

ஒரு மெலிய காற்றில்

மலரொன்று 

மலர்வதைப்  போல

ஒரு கவிதை


அல்லது 

 

மரணிக்கலாம்

ஒரு வலிய காற்றில்

மரமொன்று 

வீழ்வதைப் போல

ஒரு கவிதை

 

உலகெல்லாம் 

கொட்டி கிடக்கும்

கோடானு கோடி

அற்ப கவிதைகளில்

ஒன்று 

மலர்ந்தாலென்ன ?

ஒன்று 

மறைந்தாலென்ன  ?

Thursday, July 17, 2025

காட்டுப் பூ

Posted by sasi at 3:46 AM 0 comments

 








பசியில் இளைத்து 

புயலில் களைத்து 

புன்னகை பூத்திருக்கும் 

காட்டு செடி 

நான்


போவோர்

வருவோர் 

பறிப்பர்

நுகர்வர் 

கொண்டாடுவர் 

பின் எறிவர்

என் வாசனைப் பூவை 



sasiboojium.blogspot.com

விடுப்பு

Posted by sasi at 3:25 AM 0 comments

 








நீண்ட நாட்களாக

களைத்துப் போய்

கண்ணயர்ந்து கிடக்கிறது 

என் கவிதை

 

கண் விழித்தொரு நாள்

காரியமாற்றுமோ ?

கண் மூடியொரு நாள்

மண் மூடிப்போகுமோ ? 

 

காலமோ....

கவிதையோ....

யாது நிகழுமோ

யாரறிவர்  ?

 

sasiboojium.blogspot.com

 

Thursday, August 17, 2023

வயது 75, வளர்ச்சி ?

Posted by sasi at 9:39 PM 0 comments

 








அன்றைக்கு...

வெள்ளை எலிகளை

விரட்டியடித்து...

 

கொள்ளை

பெருச்சாளிகளை

கஜானாவிற்கு

காவல் வைத்தோம்

 

இன்றைக்கு...

தின்று கொழுத்து

தின்று கொழுத்து

தின்று கொழுத்து

நன்று வாழ்கிறது

கொள்ளை சமூகம்

 

தீராக் கடனுற்று

மீளாத் துயருற்று

வறுமை நோயுற்று

இருமி இருமிச் சாகிறது 

இந்திய சமூகம் 


sasiboojium.blogspot.com

Sunday, December 12, 2021

கோபமெனக்கு

Posted by sasi at 2:06 AM 0 comments









கரோனா மீது

கடுங் கோபமெனக்கு .... ‌

பூரண நிலாக்களை             

முகக்கவசந் தரித்த                                 

பிறை நிலாக்களாய்       

குறைக்கிறதே


sasiboojium.blogspot.com

Friday, September 24, 2021

இறுதி

Posted by sasi at 5:01 AM 0 comments








இருகூர் பிரிவு 

கடக்கும் போதெல்லாம்... 

அறம் மின் மயானத்து

மரம் என்னை 

கரம் நீட்டி 

அழைப்பது போலிருக்கும்


sasiboojium.blogspot.com



 

Wednesday, September 22, 2021

நாட்கள்

Posted by sasi at 5:59 AM 0 comments






அனேகமாய் 

திட்டி தீர்க்கும் 

காறி உமிழும் 

முகத்திலறையும் 

கதவடைக்கும்,

  

சினேகமாய் 

சில நாட்களே 

கட்டியணைத்து 

முத்தமிடும்


sasiboojium.blogspot.com

Sunday, March 28, 2021

மனிதனொரு வால்

Posted by sasi at 11:34 PM 0 comments

 










பூமியின் தேகத்தில்

மனிதனொரு வால்.

தலை போன்ற 

தாவரங்களையும்

இதயம் போன்ற 

றினைகளையும்

கொன்றழித்து

தின்றழித்து

வாலே வலிமையென்று...

வால்

வாலாட்டிக் கொண்டிருக்கிறது


sasiboojium.blogspot.com


Monday, March 22, 2021

வாக்காளர் ஆடுகளே

Posted by sasi at 3:15 AM 0 comments

 







தேர்தல் சந்தையில்

காப்பன் என்றும்

மேய்ப்பன் என்றும்

மீட்பன் என்றும்

கூவியோடி வரும்

திருடர் கூட்டம்.

வாயருகே தீனி வைத்து

கழுத்தருகே கத்தி வைக்கும்

கயவர் கூட்டம்.

ஆறறிவு ஆடுகளே,,,

எப்போதும் போலவே

இப்போதும் 

கத்திக்கு தோதாய்

கழுத்தை வளைக்காதீர்


sasiboojium.blogspot.com

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea