மாதா பிதா குரு
மற்றும் மற்றெல்லோருக்கும்,,,,
கால் முளைத்த
வண்ணத்துப் பூச்சிகள்
எமது சிறகுகளை மடக்கி
வீட்டுக் கூண்டுகளில்
சிறை வைப்பீர்
விரல்கள் அல்ல
தலைகள் கேட்கும்
உமது துரோண குருகுலங்களில்
எம்மை அடகு வைப்பீர்
உமது அறிவுக் குப்பைகளை
எமது மூளையில்
கொட்டி வைப்பீர்
எமது தோள்களில்
உமது நிராசைகளை
நிரப்பி வைப்பீர்
எமது தலைகள் மீது
உமது கனத்த கனவுகளை
இறக்கி வைப்பீர்
எமது சூரியன்களை மறுத்து
உமது விளக்குகளை
ஏற்றி வைப்பீர்
எமது நட்சத்திரங்களை ஒளித்து
உமது நவரத்தினங்களை
கொடுத்து வைப்பீர்
எமது ஓவியங்களை அழித்து
உமது கிறுக்கல்களை
எழுதி வைப்பீர்
எமது வாழ்க்கை பயணத்திற்கு
உமது அறியாமை ஊர்திகளை
அனுப்பி வைப்பீர்
எமது பூவின் தேகத்தில்
உமது வக்ர வன்முறை
நடத்தி வைப்பீர்
எமது கற்கும் புத்தியை
உமது தொழிற் கூடங்களில்
நசுக்கி வைப்பீர்
எமது பெற்றோரே,,,,
மற்றோரே,,,,
போதும்
போதும்
எமது பரிசுத்த பூமியின் மீது
உமது அழுக்கை சேர்க்காதீர்கள்
sasiboojium.blogspot.com

0 comments:
Post a Comment