Wednesday, April 22, 2020

கவலையுறாதே மனிதா

Posted by sasi at 1:32 AM 0 comments














சீனாவில் பிறந்து
பூதாகரமாய் பல்கிப் பெருகி
உலகமெங்கும் விஸ்வரூபமெடுத்து
நிராயுதபாணி மனிதனை பலி கொண்டு
பூமியை துக்க வீடாய் செய்தது
இந்த கரோனா

விண்ணுக்கு தாவிய மனிதனை
மண்ணுக்குள் புதைத்து சிரித்தது
இந்த கரோனா

பூமியெங்கும்
விரைந்து பறந்த மானுடத்தை
கான்கீரிட் கூண்டுகளுக்குள் கிடத்தியது
இந்த கரோனா

கண்கள் அறியும் எதிரியை
பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள்
இங்கே அனேகமுண்டு
கண்கள் அறியா சிறு கிருமியிடம்
பதுங்கி ஒழிய
எங்கே இடமுண்டு

உயிர் பயம் கொண்டு மானுடம்
விழி பிதுங்கி கிடந்த போது,,,
வழியெங்கும் வலம் வந்தது
அஃறினைகள் மனித பயமின்றி

சிறகுடைந்த மானுடம்
தத்திக் கொண்டிருந்த போது,,,
வானமெங்கும் வலம் வந்தது
பறவைகள் யாவும் சிறகு விரித்து

கொய்யாத பூக்கள்
செடிகளை அலங்கரிக்கிறது
பறிக்காத பழங்கள்
மரங்களில் பழுக்கிறது
கரியமிலங் கலவாத காற்று
லேசாய் மிதக்கிறது
கழிவு கலவாத ஆறு குளமெல்லாம்
நன்னீராய் இருக்கிறது
வலையில் விழாத உயிரினங்கள்
கடலில் குதிக்கிறது
ஓயாது ஓடிக் கிடந்த மானுடம்
கொஞ்சம் இளைப்பாறிக் கிடக்கிறது

சக உயிர் துயர் கண்டு
இரங்கும் மனங்கள் சில
இன்னல் துடைக்க
கரம் கோர்க்கும் நாடுகள் பல

மனித குலத்தை
மீட்டெடுக்க போராடும்
வாழும் கடவுளர்கள்
நலம் வாழ்க

கரோனா தந்த வலி பெரிது
கரோனா நிகழ்த்திய
பாடம் அதனினும் பெரிது

உலக பொருளாதாரம்
உடைந்தே போனது
இனி எழுமா ?
நிற்குமா ?

உலக மானுடம்
உருக்குலைந்தே போனது
இனி மீளுமா ?
வாழுமா ?

கவலையுறாதே மனிதா
கரோனாவை கொன்று
மானுடம் நின்று வாழும்

இனியாவது
இயற்கையோடு
இயைந்தே இருப்பாய்
இயற்கையை காப்பாய்
பொறுப்பாய்

sasiboojium.blogspot.com
 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea