நதி கேட்டு
கடல் கொண்டது அன்று
சமுத்திரம் யாசித்து
பனித்துளி அடைந்தது இன்று
முட்களின் படுக்கையிலும்
கனவு கொண்டது அன்று
பூக்களின் மஞ்சத்திலும்
புழுங்குவது இன்று
அலை போல
துள்ளிக் கிடந்தது அன்று
மலை போல
மெளனங் கொள்வது இன்று
வேரென்று கூவியது
அன்று
இலையென்று உரைத்தது
இன்று
இடியாய்
முழங்கியது அன்று
செடியாய்
அசைவது இன்று
விரிந்து கிடந்த
உப்புக் கடல் அன்று
திறந்து கிடக்கும்
நன்னீர் சுனை இன்று
ஆசைகளின்
அணிவகுப்பு அன்று
அனுபவங்களின்
மாநாடு இன்று
சூடான சூரியன்
அன்று
சுத்தமான பனித்துளி
இன்று
தலைக்கு
மழை கேட்டது அன்று
மழைக்கு
குடை கேட்பது இன்று
எடைக்கு எடை
கனவு கொண்டது அன்று
நகத்தளவு
நனவானது இன்று
அறிவே
ஆன்டவன் என்றது அன்று
அனுபவங்களே
வரம் தந்தது இன்று
சுகம் மட்டுமே
தேவையென்று சூளுரைத்தது அன்று
வலியும் கொஞ்சம் இருக்கட்டுமென்று
வேண்டிக் கொள்வது இன்று
வரவை மட்டுமே
கணக்கு வைத்தது அன்று
செலவையும் சேர்த்தே
குறித்துக் கொள்வது இன்று
நிலாவில் ஏறி
விண்மீனுக்கு தாவியது அன்று
மேடு பள்ளம் கணித்தே
மண்ணில் காலூன்றுவது இன்று
பாறையென்றே
இறுகிக் கிடந்தது அன்று
உளிக்கு உடன்படுவது
இன்று
வானமெங்கும்
திரிவதே வாழ்க்கை அன்று
கூட்டுக்குள் அடைவதே
வாழ்க்கை இன்று
காலில்
முள் தைத்தது அன்று
முள்ளில்
கால் தைத்தது இன்று
விண்மீன்களையும்
தின்று செரித்தது அன்று
வெறும் மீனையும்
விழுங்கத் திணறுவது இன்று
ஆலகாலம் அருந்தியே
தேகம் வளர்த்தது அன்று
அமிர்தமே ஆனாலும்
அளவோடிருத்தல் இன்று
தேனென்பது விருந்து
அன்று
தேனென்பது மருந்து
இன்று
நாளெல்லாம்
வளர்பிறை அன்று
தேதியெல்லாம்
தேய்பிறை இன்று
தனிமை
சிறகு அன்று
தனிமை
சிறை இன்று
நடந்தால்
உடன் நிலா வந்தது அன்று
ஊன்று கோல் மட்டும்
உடன் வருகிறது இன்று
சூர்யோதயம்
பேரழகு அன்று
அஸ்தமனம் கூட
அழகாகிறது இன்று
sasiboojium.blogspot.com

0 comments:
Post a Comment